தலைக்கவசம் அணியாதவர்களிடம் உத்திரவாத கடிதம் பெறும் காவல்துறை !
தருமபுரி நகரில் தலைக்கவசம் அணியாத வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம், காவல்துறையினர் தலைக்கவசம் அணிய உத்திரவாத கடிதம் பெற்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாமல் வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டிகள் நீதிமன்றத்திற்கு சென்று, நீதிபதிகளிடம் தலைக்கவசம் அணியாததை விளக்கம் அளித்து, அதன்பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பும் கொடுத்திருந்தார். மேலும் இது பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாளிதழ்கள் மற்றும் வானோலி ஆகியவற்றில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தருமபுரி நகரப்பகுதியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வள்ளலார் மைதானம் அருகே தீவிர இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடம் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் இன்று நான் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினேன் என்றும், இனி வருங்காலங்களில் தலைக்கவசம் அணிந்து தான் வாகனத்தை ஓட்டுவேன் என்று அவர்கள் கைப்பட எழுதிய உறுதியளிப்பு கடிதத்தில் கையொப்பமிட்டு, அதனை காவல்துறையினரிடம் வழங்கிய பின்பே வாகனங்களை விடுவித்தனர். இப்புதிய யுக்தியால் தலைக்கவசம் குறித்து ஏராளமான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனையில் பிடிபட்ட வாகன ஓட்டிகள் அனைவருமே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு தங்கள் வாகனத்தை எடுத்துச் சென்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 100% தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை வாகன ஓட்டிகள் ஓட்ட வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட காவல்துறை எடுத்து வரும் இம்மாதிரியான நடவடிக்கைகளை பொதுமக்களும் தங்கள் ஆதரவையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து இம்மாதிரியான வாகன சோதனை நடைபெறும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.