சீட் பெல்ட்டிற்கு அபராதம்? - இருசக்கர வாகனத்தில் சென்றவர் அதிர்ச்சி
புதுக்கோட்டையில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவர் கடந்த வாரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அறந்தாங்கி - காரைக்குடி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ராஜபிரபுவை வழிமறித்தனர். அப்போது ராஜபிரபு தலைக்கவசம் அணியாததால், அவரிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்த காவலர்கள், அதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர்.
ஆனால் அதில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டதைக் கண்டு ராஜபிரபு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கே. புதுப்பட்டி காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது, பணிச்சுமை காரணமாக அபராதத்திற்கான காரணத்தை மாற்றி பதிவிடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.