ஓமலூர்: கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா: அச்சத்தில் போலீசார்
ஓமலூர் அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானதால் அவர் தப்பியோடினார். அவரை மீண்டும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி ஊராட்சி சரக்கபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகேசன் வீட்டருகே பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், முருகேசனை, ராஜமாணிக்கம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த முருகேசன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 65 வயதான முதியவர் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைப்பதற்கு முன்பாக ராஜமாணிக்கதிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் ராஜமாணிக்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராஜாமணிக்கம் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், அவரை சிகிச்சைக்கு அழைத்து சென்ற போலீசார் கொரோனா அச்சத்தில் உள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட முதியவருடன் இருந்த போலீசார், அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

