சேலம்: விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் திடீரென உயிரிழப்பு
சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த தலைமை காவலர் திடீரென உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில்வே நிலையம் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தவர் தலைமை காவலர் கனிபிரசாத். இவருக்கு நிர்மலா தேவி என்ற மனைவியும் அரவிந்த், அஜிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை விமான நிலையத்தில் பணியில் இருக்கும்போது திடீரென கனிபிரசாத்திற்கு ஜன்னி வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து துடிதுடித்த கனிபிரசாத்தை, சக காவலர்கள் உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு கனிபிரசாத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கனிபிரசாத் விமான நிலையத்தில் பணியாற்றி வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீஸார் உடற்கூறாய்வு செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.