மதுரை: 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் போலீஸ் உயிரிழப்பு

மதுரை: 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் போலீஸ் உயிரிழப்பு
மதுரை: 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் போலீஸ் உயிரிழப்பு

மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாட்டில் சிக்கி ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு காவலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர் விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பாக இருசக்கர வாகனத்தின் நடமாடும் தேநீர் கடையின் மூலமாக தேநீர் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.

அதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறிய காவலர்கள் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது  அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. 

இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் கட்டட உரிமையாளரான இத்ரிஸ் மற்றும் வாடகைதாரர் உட்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் விசாரணை நடத்தினார்.
காவலர் உயிரிழப்பை தொடர்ந்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவிற்கு பழமையான கட்டடங்கள் உள்ள நிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே கடந்த 2020ஆம் ஆண்டில் தீபாவளியன்று பழமையான கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் கட்டட விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- மணிகண்டபிரபு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com