ரவுடிகளால் கொல்லப்பட்ட காவலர் விஜயன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

ரவுடிகளால் கொல்லப்பட்ட காவலர் விஜயன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை
ரவுடிகளால் கொல்லப்பட்ட காவலர் விஜயன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

சென்னை ஆலந்தூரில் ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் விஜயனின் உடல், சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சங்கலிவாடி கிராமத்தைச் சார்ந்த சேட்டு-வெண்ணிலா தம்பதியரின் மகன் விஜயன். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார். சென்னைப் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த விஜயன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மரக்காணம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினருடன் சென்னை ஆலந்தூரில் வசித்துவந்த விஜயனுக்கு, கடந்த ஐந்து மாதத்திற்கு முன்புதான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு தன் மைத்துனர் வாசுதேவனுடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, அஜ்மல் என்பவர் விஜயனை செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது அஜ்மல், தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாகவும், உடனே வந்து காப்பாற்ற வேண்டும் எனவும் இவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கும்பலை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்தக் கும்பல் காவலர் விஜயன், வாசுதேவன் ஆகியோரை தாக்கியுள்ளது. இதில் காவலர் விஜயனுக்கு நெற்றிப் பொட்டில் படுகாயம் ஏற்பட்டு, கீழே சரிந்து விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட ரவுடி கும்பல் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் சுயநினைவின்றி விழுந்து கிடந்த விஜயனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன்பிறகு காவலர் விஜயனின் பெற்றோர் மற்றும் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ரவுடி கும்பல் தாக்கியதாக கூறாமல், விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு வந்த மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்களிடம் விபத்து என தெரிவித்துள்ளனர். ஆனால் சுயநினைவின்றி இருந்ததால், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றியுள்ளனர். இதுகுறித்து பரங்கிமலை காவல் துறையினர் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து காவலரை தாக்கிய அஜித், வினோத், விவேக், ரவிகுமார் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனாலும் இரண்டு நாட்களாக சுயநினைவின்றியே காவலர் விஜயன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல்கூறு பரிசோதனை நிறைவடைந்து உடலைச் சொந்த ஊரான அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்திற்கு காவல் துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது விஜயனின் உடலைக் கண்டு, கிராம மக்களும் உறவினர்களும் கதறி அழுதனர். அங்கு விஜயனின் உடல் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதிச் சடங்குகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று மயானத்தில் காவல் துறையினரின் முழு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க காவலர் விஜயன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர் விஜயனை இழந்ததால், கிராமம் முழுவதும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

காவலர் விஜயனை, வாசுதேவன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. ஏனென்றால் தொலைபேசியில் அழைப்பு விடுத்த அஜ்மலுக்கும், வாசுதேவனுக்கும், சிறு காயம்கூட ஏற்படவில்லை. அதேபோல் விஜயன் அடிபட்டு கீழே விழுந்தவுடன், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதால், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், காதல் கணவரை இழந்து, ஐந்து மாத குழந்தையுடன் நிற்கும் காவலர் விஜயனின் மனைவி மீனாட்சிக்கு அரசு நிதியுதவி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com