தமிழ்நாடு
கர்ப்பிணி பெண்ணை அழைத்துவரச் சென்ற ஆட்டோ போலீசாரால் பறிமுதல்: நடந்தே சென்ற பரிதாபம்..!
கர்ப்பிணி பெண்ணை அழைத்துவரச் சென்ற ஆட்டோ போலீசாரால் பறிமுதல்: நடந்தே சென்ற பரிதாபம்..!
கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரச் சென்ற ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கார்த்திகா என்ற கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குச் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோ ஓட்டுநருக்கு போன் செய்து அழைத்துள்ளார். அப்போது கர்ப்பிணிப் பெண்ணை அழைத்து வரச் சென்ற போது ஆட்டோவை வழி மறித்த காவல்துறையினர் ஓட்டுநர் முரளியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆட்டோவையும், ஓட்டுநரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நடைப்பயணமாக போடி அரசு மருத்துவமனையிலிருந்து காவல்நிலையத்திற்குக் கர்ப்பிணிப் பெண் கார்த்திகா நடந்தே வந்துள்ளார். தன்னை அழைத்து வர வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்ததை அறிந்து உண்மையை விளக்கிக் கூறியுள்ளார். காவல்துறையினர் அதனை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. கர்ப்பிணி கார்த்திகா, ஓட்டுநரை விடுக்கக் கோரியும் அவர்கள் மறுத்துள்ளனர். ஆகவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் போடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அபர்ணா என்ற கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற பாண்டியன் என்ற ஆட்டோ ஓட்டுநரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போதும் அபர்ணாவை நடுவழியில் இறக்கி விட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் அபர்ணா நடந்தே போடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவ சோதனை செய்து கொண்டு விடு திரும்பியுள்ளார். இந்த இரு சம்பவங்களும் போடி காவல் துறையினர் மீது பொது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று இந்த இரண்டு கர்ப்பிணிப் பெண்களையும் தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் உடல் நலம் குறித்தும் நடந்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.