மங்களூரு குக்கர் வெடிப்புக்கும் கோவை விடுதிக்கும் என்ன லிங்க்?-விசாரணையில் வெளிவந்த தகவல்!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் வெடிப்பு சம்பவம் நிகழ்த்திய நபர் கோவையில் தங்கி இருந்த விடுதிக்கு காவல்துறையினர் பூட்டு போட்டுள்ளனர்.
மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது ஷாரிக் கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் காந்திபுரம் பகுதியில் உள்ள MMV- மதிமகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில், அவரது அறைக்கு பக்கத்து அறையில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் தங்கி இருந்தார். இவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுரேந்திரன் தனது ஆதார் ஆவணங்களை பயன்படுத்தி முகமது ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் தங்கியிருத்த விடுதியில் நேற்று உதகை மாவட்ட போலீசார் விசாரணை நடத்திச் சென்றனர். இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த நபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பின்னர் விடுதிக்கு பூட்டு போடப்பட்டது. மேலும் விடுதியின் மேலாளர் மற்றும் உரிமையாளர் காமராஜ் ஆகியோர் காட்டூர் காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராக இருக்கின்றனர். இதனிடையே விடுதியில் இருந்து ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளனர்.