கழுத்தில் இருந்த செயின் எங்கே?: மூதாட்டியின் இறப்பில் சந்தேகமடைந்த போலீஸ்
4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்துவிட்டு தற்கொலை போல் சித்தரித்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள லிங்கமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள். இவர்களின் பிள்ளைகள் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார், அந்த மூதாட்டி. அவர் வீட்டை விட்டு வெகு நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், உள்ளே சென்றுபார்த்தபோது அதிர்ந்து போயினர். எல்லம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு பதற்றமடைந்த அவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, எல்லம்மாளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலி மாயமாகி இருப்பதை அறிந்த காவல்துறையினர், வேறு கோணத்தில் விசாரணை செய்யத் தொடங்கினர்.
அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியின் நகையை பறிக்க முயன்றதாகவும், அதில் ஏற்பட்ட மோதலில் எல்லம்மாள் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. எல்லம்மாளின் கொலையை தற்கொலைபோல் சித்தரிக்க நினைத்த அந்த கும்பல், அவரை தூக்கில் தொங்கிவிட்டுவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.