வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்: குவியும் பாராட்டு
சென்னை அமைந்தகரையில் வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த காவலர் உள்ளிட்ட இருவருக்கு, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமைந்தகரை பகுதியில் பாலாஜி என்பவரின் செல்ஃபோனை பறித்த வழிப்பறி கொள்ளையர்கள், இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த அமைந்தகரை காவல்நிலைய காவலர் வினோத் மற்றும் காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். மேலும் அவர் திருடிச் சென்ற செல்ஃபோனையும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த செய்தி அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இருவரையும் நேரில் அழைத்து பாராட்டியதுடன், வெகுமதி அளித்து கவுரவித்தார்.
இதேபோல் எழும்பூரில் முதல்நிலைக் காவலர் மீது ரவுடிகள் இருவர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். அவர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு மடக்கிப் பிடித்த காவலர் ராம்குமாருக்கு, துணை ஆணையர் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளார்.