நீட் தேர்வுக்கு எதிராக போராடத் தூண்டியதாக கல்லூரி மாணவி மீது வழக்கு
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வுக்கு எதிராக போராடத் தூண்டியதாக கல்லூரி மாணவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்விற்கு எதிராக போராட மாணவிகளைத் தூண்டியதாக சென்னை பாரதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற மாணவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நேரில் வந்து விளக்கமளிக்குமாறு மஞ்சுளாவுக்கு முத்தியால்பேட்டை காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.
இதன்படி இன்று மாலைக்குள் நேரில் வந்து நன்னடைத்தைக்கான சான்றிதழை தேவையான பிணையாட்களின் கையொப்பத்துடன் சமர்ப்பித்து விளக்கமளிக்க வேண்டும் என மஞ்சுளா பணிக்கப்பட்டுள்ளார். இல்லையெனில் அவர் மீது குற்றவிசாரணை முறை சட்டப்பிரிவு 107-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மாணவி விளக்கமளிக்கத் தவறும் வகையில் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தோடு, சிறை தண்டனையும் வழங்க வழி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.