ஹெல்மெட் போடாதவர்களுக்கு ‘இன்ப சுற்றுலா’ - காவல்துறை புது முயற்சி
தருமபுரியில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 70 பேரை காவல்துறையினர் புதிய நீதிமன்ற வளாகத்திற்கு இன்ப சுற்றுலா அழைத்துசென்றனர்.
தமிழகம் முழுவதும் கட்டாயம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனங்காளை ஓட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் போக்குவரத்துறை மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வந்தனர்.
அத்துடன் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்காமல், மன்னிப்புக் கடிதம் பெற்று எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும், தற்போது புதிய முயற்சியாக தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து, அபராதம் விதிக்காமல் அவர்களின் விவரங்களை பதிவு செய்தனர். அத்துடன் பிடிக்கப்பட்ட 70 பேரை காவல்துறையினர் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, தலைக்கவச இன்ப சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர்.
இந்த இன்ப சுற்றுலாவில் தருமபுரி நகர் பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமனற வளாகம் சுற்றிக்காண்பிக்கப்பட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மகிளா மற்றும் கூடுதல் மகிளா நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி, காவல் துறையினரிடம் சிக்கி நீதிமன்றத்திற்கு அபராதம் செலுத்த சென்றால், அங்கு என்ன நிகழும் என்பதனையும், காலதாமதம் ஏற்படுவதையும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளது.

