ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ரெசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு தடை

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ரெசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு தடை
ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ரெசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு தடை

கிழக்கு கடற்கரை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் உள்ள ரெசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள ரெசார்டுகளில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக காவல்துறையினர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரெசார்ட் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் உடன் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆலோசனை நடத்தினார். புத்தாண்டு இரவில் கேளிக்கை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் நடத்தக் கூடாது என்றும், விருந்தினர்களை கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் ரெசார்ட் உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடற்கரையை ஒட்டிய விடுதிகளில் தங்குபவர்கள் அதற்கான ஆதாரங்களுடன் 31ஆம் தேதி இரவு 10 மணிக்குள் மட்டுமே கடற்கரை சாலைகளில் அனுமதிக்கப்படுவர் என்றும், கடற்கரை சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 500 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் எஸ்.பி. கண்ணன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com