தனக்கு தானே குண்டு வீச்சு ! அனுமன் சேனா பிரமுகர் கைது
திருவள்ளூரில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி என நாடகமாடியதாக அனுமன் சேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிகுமார். அவர் அனுமன் சேனா என்ற அமைப்பின் மாநிலச் செயலாளராக உள்ளார். செங்குன்றம் அருகில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் காரில் பயணித்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்றதாக காளிகுமார் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தார்.
நிகழ்விடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரித்ததில், அவர் பொய்யாக புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து காளிகுமார், அவரது நண்பர் ஞானசேகரன் மற்றும் உறவினர் ரஞ்சித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தன் காரின் மீது தானே பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவிட்டு நாடகமாடியதாக காளிகுமார் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.