பகலில் ஆட்டோ ஓட்டுநர்கள்.. இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்
பகலில் ஆட்டோ ஓட்டுநர்களாகவும், இரவில் தார்ப்பாய் கொள்ளையர்களாகவும் செயல்பட்ட கொள்ளையர்களை திரைப்பட பாணியில் விரட்டிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த முகமது ஃபரித் என்பவர் அறந்தாங்கியில் இருந்து காளையார் கோவிலுக்கு பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு லாரியில் சென்றுள்ளார். அப்போது சாலையில் நின்றிருந்த ஆம்னி வேனுக்கு முன்பாக ஒருவர் காயமடைந்ததைப் போல கிடந்துள்ளார்.
இதனையடுத்து லாரி ஓட்டுநர் முகமதுஃபரித் கீழே இறங்கி என்ன என்று பார்த்தப்போது, அருகில் இருந்த புதருக்குள் மறைந்திருந்த 5 பேர் கையில் ஆயுதங்களுடன் லாரி ஓட்டுநரை தாக்கி அவர் வைத்திருந்த ரூபாய் 12,000 பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர். இதையடுத்து லாரி ஓட்டுநர் முகமது ஃபரித் இதுகுறித்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து மேலூர் சூரக்குண்டு நான்குவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷூக்கு தகவல் அளிக்கப்பட்து. அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்த முற்பட்டப்போது, அவர்கள் நிற்காமல் அருகே உள்ள கிராம சாலையில் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் திரைப்பட பாணியில் விரட்டிச் சென்று வேனை மடக்கி கொள்ளையர்களை பிடித்தனர்.
இதில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில். மூன்று பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அவர்கள் சமயநல்லூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ்வரன், கதிர்ராஜா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் பகலில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் இரவில் ஓடும் லாரிகளில் தார்ப்பாயை கிழித்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.
மேலும் இவர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் கொள்ளையில் ஈடுபட்டதும், இவர்கள் மீது காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. திரைப்பட சம்பவம் போலவே கொள்ளையில் ஈடுபட்ட தார்ப்பாய் கொள்ளையர்களை, திரைப்பட பாணியிலேயே விரட்டிச் சென்று காவல்துறையினர் கைது செய்திருப்பது, மேலூர் மக்களிடையே பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது.