சீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது
சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 11 திபெத்தியர்களை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் தங்கும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் சென்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு இரவு உணவுக்குப் பின் இரவு சோழா ஓட்டலுக்கு திரும்பி பிறகு நாளை காலை மீண்டும் பிரதமர் மற்றும் முக்கிய பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
இதனால் சென்னை, காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே சீனாவுடன் இணைந்துள்ள திபெத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக திபெத்தியர்களில் ஒரு பிரிவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வரும் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்டு அவர் தங்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு 3 பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை விமன நிலையத்தை திடீரென முற்றுகையிட்ட மேலும் 6 திபெத்தியர்களை முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.