கர்நாடகாவில் சினிமா பாணியில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்த காவல்துறை - முழு விபரம்

கர்நாடகாவில் சினிமா பாணியில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்த காவல்துறை - முழு விபரம்
கர்நாடகாவில் சினிமா பாணியில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்த காவல்துறை - முழு விபரம்

சினிமா பட பாணியில் காரில் தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தது தனிப்படை காவல்துறை. அவரை 10 கிலோ மீட்டர் சேஸிங் செய்து பிடித்த சுவாரஸ்யம் பற்றிய தகவல்கள் இதோ...

சாத்துரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விஜய நல்லதம்பியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை (மோசடி செய்தது,சதி திட்டம் தீட்டியது) (406, 420)120B ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பர் 15ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

அதேபோல், அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பியிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு கட்சியை சேர்ந்த பலருக்கும் பால்வளத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், விஜய நல்லதம்பிக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக விஜய நல்லதம்பி அளித்த புகாரின் பேரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ராஜேந்திர பாலாஜியை போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அவரது உறவினர், ஆதரவாளர்கள், கட்சியினர் உள்ளிட்ட 600 பேரின் செல்போன்களை சைபர் கிரைம் போலீஸ் கண்காணித்தது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது, அவரது 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. அவர் ஆண்டிராய்டு அல்லாத சாதாரண செல்போனை பெருமளவில் பயன்படுத்தியதும், புதிய புதிய சிம் கார்டை பயன்படுத்தி அவருக்கு உதவி செய்யும் நபர்களை தொடர்பு கொண்டதும் தெரிய வந்தது.

அவர் சாமி பட பாணியில் பெருமாள் பிச்சை போல வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது, அதில் குறிப்பாக பாஜக கொடி கட்டிய காரில் தப்பி சென்றதும் தெரியவந்தது.

அவருடன் தொடர்பில் இருந்ததாக ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களான வசந்தகுமார், ரமணன்,கார் ஓட்டுனர் ராஜ்குமார் ஆகிய 3 பேரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, மேலும் அவரது ஆதரவாளர்கள் மொத்தம் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தர்மபுரியில் பதுங்கி உள்ள தகவல் தெரியவந்தது, இதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை அங்குள்ள சில தங்கும் விடுதிகளில் சோதனை செய்ததில் அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதிக்கு வந்துவிட்டு சென்றதற்கான ஆதரமாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கிட்டத்தட்ட அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து பின் தொடர துவங்கிய காவல்துறை அவருக்கு நெருக்கமான நபர்களின் செல்போன் எண்களை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியது. இறுதியாக அவரது உறவினர்கள், அவருக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் சில தொழிலதிபர்களின் செல்போன்களை கண்காணித்தில் அவர்கள் ராஜேந்திரபாலஜியுடன் பேசியதை வைத்து செல்போன் சிக்னல் மூலமாக அவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.

செல்லும் வழிகளில் இருந்த அனைத்து சுங்க சாவடிகளிலும் உள்ள கண்காணிப்பு கேரமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்படி ஹாசன் மாவட்ட எல்லையில் உள்ள சுங்க சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் அவர் 12.45 மணியளவில் அந்த சுங்க சாவடியை கடந்தது தெரியவந்தது, அதனை சுமார் 1 மணி வாக்கில் காவல்துறை பார்த்த நிலையில் ஹாசன் காவல் நிலைய போலீசாரிடம் உதவியை நாடியுள்ளனர் தனிப்படை காவல்துறை. சற்று நேரத்தில் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரை சேஸிங் செய்து பெங்களூர், மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது. அவர் தப்பி செல்ல முடியாத நிலையில் அவர் சென்ற காரிலேயே அவரை காவல்துறை அழைத்து வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அங்குள்ள மக்கள் கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக கருதி பரபரப்படைந்துள்ளனர், இந்நிலையில் அங்குள்ள கர்நாடக காவல்துறை மக்களிடம் உரிய விளக்கம் அளித்துள்ளது. அவருடன் இருந்து அவருக்கு உதவி செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகளும் அழைத்து வரப்படுகிறார்கள்.

கடந்த 20 நாட்களாக தனிப்படை போலிஸார் அவரை பிடிக்க சீருடை அணியாமல் பல்வேறு வேடங்களில் சென்று விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே அவர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளை வரவுள்ளது. இதனிடையெ, ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com