ஆண்டாள் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து
ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ராஜபாளையத்தில் ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பங்கேற்று ஆண்டாள் குறித்து உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களை குறிப்பிட்டு அவர் பேசினார். அதில், ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவர் என்ற கருத்தினை குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. அவரது சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டாள் குறித்து இழிவாக பேசியதற்காக, வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். அதேபோல், ஆண்டாள் குறித்து தவறான கருத்துக்களை வைரமுத்து பதிவு செய்துள்ளதாகவும், அதனை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வம் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆண்டாள் குறித்த தமது கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து வைரமுத்து தமது சுட்டுரையில், “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன். அது எனது கருத்தன்று, ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.
ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.