ஊழல் வெட்கப்பட வேண்டிய விஷயம், புற்றுநோய் அப்படியல்ல: மருத்துவர் சாந்தா பதிலடி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் மேத்தாவிற்கு புற்றுநோய் நிபுணரான சாந்தா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடிகள் நடந்தது சமீபத்தில் அம்பலமானது. இதுகுறித்து கடந்த 15ம் தேதி செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனில் மேத்தா மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக கூறினார். மேலும் இந்த மோசடியை கேன்சர் என்றும் சுனில் மேக்தா குறிப்பிட்டார். இது கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு அறுவை சிகிச்சையாக செய்து மோசடி புற்றுநோயை அகற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த கேன்சர் முழுமையாக அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் சுனில் மேக்தாவின் பேச்சிற்கு பிரபல புற்றுநோய் நிபுணரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சாந்தா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வங்கி மோசடி தொடர்பாக சமீபத்திய தங்களின் பேச்சு தன்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். “ ஊழல் என்பது குற்றம். அதற்காக வெட்கப்படவேண்டும். ஆனால் புற்றுநோய் என்பது அதுபோன்றது அல்ல. எங்கள் மருத்துவமனையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் சிகிச்சை பெற்று சிறப்பான வாழ்வை மேற்கொள்ளும்போது நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இத்தகைய புற்றுநோயை குற்றங்கள் சம்பந்தப்பட்ட ஊழலோடு தொடர்புபடுத்த வேண்டாம். ஊழலை எப்போதுமே புற்றுநோயோடு தொடர்புபடுத்த கூடாது. எனவே ஊழலை புற்றுநோயோடு தொடர்புபடுத்தி வெளியிட்ட அறிக்கையில்புற்றுநோய் என்ற வார்த்தையை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.