\
ANBUMANI RAMADASS
ANBUMANI RAMADASSANI

மௌனம் காக்கும் பாமக! யாருக்கு ஆதரவு? யாருக்கு அதிர்ச்சி? எடுக்கப்போகும் முடிவு! மாறும் தேர்தல் களம்?

தமிழகத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Published on
Summary

விஜய் ராஜினாமா, அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவல் காரணமாக உருவான இடைத்தேர்தலில், திமுக, அதிமுக, தவெக கடுமையாக மோதுகின்றன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆதரவு தவெக பக்கம் சாயும் நிலையில், மதுராந்தகத்தில் பாமக எந்த அணியைத் தேர்வு செய்கிறது என்பதே அரசியல் சூழ்நிலையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய், பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தேர்தல் விதிகளின்படி ஒரு தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

When Will It Start thai maaman thanga mothiram thittam Scheme
CM VijayPTI

இந்த தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளில் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், முதலில் வேட்பாளரை அறிவித்து இடைத்தேர்தலுக்கு தயாரானது திமுக. அதன் பிறகு தவெகவும் வேட்பாளரை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை களம் இறக்கியது.

திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளும் மக்களுக்கு நன்கு பரிச்சயமான வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், இந்த இடைத்தேர்தல் மும்முனைப் போட்டியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. 2026 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் இடைத் தேர்தல் என்பதால், ஒவ்வொரு கட்சியும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க தீவிரமாக செயல்படும் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவில் பயணித்த அனுபவம் தவெக வேட்பாளருக்கு கை கொடுக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளின் ஆதரவும் தவெகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிக முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், இந்த முறையும் தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்த திமுக, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறது. இந்நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கேம் சேஞ்சராக பார்க்கப்படுவது பாமக தான்.

ANBUMANI RAMADASS
ANBUMANI RAMADASSANI

ஏனென்றால், இந்த தொகுதி தனித் தொகுதியாக இருந்தாலும், பாமகவுக்கு கணிசமான வாக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பாமக கூட்டணியில் இருந்ததால், அதிமுகவின் வெற்றிக்கு கை கொடுத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், பாமக இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டையோ அல்லது ஆதரவையோ இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. இதனால், பாமகவின் நிலைப்பாட்டைப் பொறுத்து தேர்தல் வெற்றியை ஒரளவு கணிக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2026 தேர்தலில் தமிழக மக்களின் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக, அனைத்து கருத்துக்கணிப்புகளையும் உடைத்து தவெக வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வெளியாகும் தகவல்கள், கருத்துக்கணிப்புகள் என அனைத்தும் வெறும் யூகங்கள் மட்டுமே யார் வெற்றி பெறப்போகிறார்கள்?யாருடைய வாக்கு வங்கி கை கொடுக்கப் போகிறது? யாருடைய வியூகம் பலிக்கப் போகிறது? இதற்கான முடிவு அக்டோபர் 9ஆம் தேதி தெரிந்துவிடும்.

செய்தியாளர் - ராஜ்குமார் - ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com