பதவியில் இருந்து மகனை நீக்கிய அப்பா.. மோதிக்கொண்ட பாமக நிர்வாகிகள்? உட்கட்சியில் பரபரப்பு சம்பவம்!
அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய போது, அன்புமணியின் ஆதரவாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு அக்கட்சியின் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என்றும், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த அறிவிப்பு கட்சியின் வளர்ச்சிக்காகவும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அறிவிப்பதாகவும், தலைவர் மாற்றத்துற்கு நிறைய காரணங்கள் உள்ளன அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது சிறுக சிறுக அறிவிப்பேன் என கூறினார்.
இதனையடுத்து பாமக தொண்டர்கள் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் வீதியிலுள்ள பாமக ராமதாஸ் இல்லம் முன்பாக குவியத் தொடங்கினர். பின்னர், முன்னாள் பாமக நகர செயலாளர் ராஜேஷ் தலைமையில் மீண்டும் அன்புமணி ராமதாசை தலைவராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்..
அப்போது அங்கு வந்த பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் இதை கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதற்கேற்றவாறு செயல்படுங்கள் தேவையில்லாமல் போராட்டம் செய்ய வேண்டாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் போராட்டம் செய்ய கூடாது என கூறினார்.
இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது..இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த இடமே பரபரப்பானது. இது குறித்து தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.