“தோனிக்கு ஒரு விசில் போடு... ஆனா, CSK-ல ஓரு தமிழன் கூட இல்லையே...” வேதனை தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

“எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரது சிஎஸ்கே அணியில் ஓரு தமிழன் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது” என உத்திரமேரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் அன்புமணி.
Anbumani
Anbumanipt desk

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நேற்று பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “மே தினத்தில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்று சொன்னால் இரு கட்சிகளைச் சேர்ந்த ஆட்சி தான்.

1967-ல் தொடங்கிய திராவிட ஆட்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 55 ஆண்டுகள் கடந்தும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். திராவிட மாடலா பாட்டாளி மாடலா என்ற விவாதத்திற்கு நான் நீண்ட காலமாகவே அழைத்துக் கொண்டிருக்கிறேன். திராவிட கட்சிகள் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறார்கள். திராவிட மாடல் எனவும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

திராவிட மாடல் என்பது முதலாளித்துவம். பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது.

அன்புமணி ராமதாஸ்

Anbumani
Anbumanipt desk

முதலாளித்துவத்திற்காக ஒரு சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு, சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது.

இதன்கீழ் சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்டக் கூடாது; ஆனால், அந்த இடத்தில் தொழிற்சாலை கட்டலாம். உடனடியாக அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதேபோல் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கொண்டு வந்ததே தவறு.

பாஜக கொண்டு வந்தபோது திமுக அதை எதிர்த்தது. இப்பொழுது கடுமையான எதிர்ப்புக்கு பிறகு அதை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என சொல்லி உள்ளது.

மக்களுக்கு இது குறித்தெல்லாம் தெரிவதில்லை. கிரிக்கெட் கிரிக்கெட் என அதைத் தான் பார்க்கிறார்கள். அதை பார்ப்பது தப்பு கிடையாது. ஆனால், கிரிக்கெட் வாழ்க்கை கிடையாது. நானும் சிஎஸ்கே ஆதரவாளன் தான். தோனிக்கு விசில் போடு! ஆனால், அந்த அணியில் ஒரு தமிழன் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம் தான். 20 வீரர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒரு தமிழனாவது இருந்திருக்க வேண்டும். பேரிலேயே சென்னையை வைத்து கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நியாயம்?

அன்புமணி ராமதாஸ்

Dhoni
Dhonipt desk

இந்தியாவிலேயே அதிக ஏரிகளை கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்தது. ஆனால், இன்று அங்கு ஏரிகள் அழிந்துவிட்டன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கை மாவட்டத்தில் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால், எத்தனை பேர் உள்ளூர் மக்கள் என்பது கேள்விக்குறியே. தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் வேலைகளை தமிழர்களுக்கு கொடுக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டுமென நீண்ட காலமாக பாமக சொல்லி வருகிறது.

காசு போட்டால் பாட்டில் வரும் - இதுதான் திராவிட மாடல்; இதுதான் இவர்களின் வளர்ச்சி. தமிழ்நாட்டில் இரண்டு துறை வளர்ந்துள்ளது ஒன்று சினிமாத் துறை. மற்றொன்று சாராயத் துறை
அன்புமணி

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயமாக தலித் சமுதாயம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் வன்னியர் சமுதாயம் உள்ளது. இரண்டு சமுதாயத்தையும் சேர்த்தால் 40 சதவீத மக்கள் தொகை வரும். 40 விழுக்காடு மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும். அது அவர்களின் உரிமை. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள், 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் என் தம்பிகள் இருக்கிறார்கள்; பார்த்துக் கொள்வோம். வன்னியர் இட ஒதுக்கீடு என்பது உரிமைப் பிரச்னை; வாழ்வாதார பிரச்னை; சமூக நீதி பிரச்சனை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்திருப்பார்.

Public meeting
Public meetingpt desk

தமிழ்நாடு விவசாயத் துறை அமைச்சர் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விவசாய நிலங்களை பறித்து 'படுபாவி' என்எல்சிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பகுதி மக்களை பார்த்தால் பாவமாக உள்ளது. கடலூர் என்எல்சி-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க போகிறேன். எல்லோரும் வரவேண்டும். மக்களையும் மண்ணையும் வருங்கால சந்ததிகள் காப்பாற்ற வேண்டும். என்எல்சி நிறுவனத்தை அடுத்த வருடம் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்கள். தனியாருக்கு விற்க போகும் நிறுவனத்திற்காக வரிந்து கட்டிக் கொண்டு இப்போதே வேலை செய்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com