“நீங்க விரும்பலாம், ஆனா தனித்துப் போட்டியிட இப்பொழுது தயாராக இல்லை” - பொதுக்குழுவில் ராமதாஸ் பேச்சு

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் கூட 7 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் வெற்றி பெறவும் முடியும் என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்.
மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்file

செய்தியாளர்: ஆர்.முருகேசன் ராமசாமி

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் திருவுருவ படத்திற்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

Dr.Ramadoss
Dr.Ramadossfile

இந்த சிறப்பு பொதுக்குழு சில காரணங்களால் தாமதமாக நடந்தாலும், முக்கியமான நேரத்தில் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம். பாட்டாளி சொந்தம் என்று ஆழ் மனதில் இருந்து சொல்லி வருகிறோம். நாம் ஒரு குடும்பமாக இருந்து வருகிறோம். கட்சியில் உள்ள ஒரு கிளைச் செயலாளரை கூட நாம் மதிக்க வேண்டும். பாமக அன்புமணி தலைமையில் ஆட்சியை பிடிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும்.

நாம் முன்பை விட தற்போது உற்சாகமாக இருக்கிறோம். உறுதியாக இருக்கிறோம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாமக தயார் நிலையில் உள்ளது. தேர்தலில் நாம் பெற வேண்டிய வெற்றி எந்த வகையிலும் தாமதமாகிவிடக் கூடாது. நீங்கள் அனைவரும் முனைப்பாக இருக்கிறீர்கள். உற்சாகமாக இருக்கிறீர்கள். 14 மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளை வீட்டிற்கு அழைத்து பயிலரங்கம் நடத்தியுள்ளேன்” என்றார்.

anbumani
anbumanifile

தொடர்ந்து அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் யார் முதல் இடத்தில் என்று ராமதாஸ் கேள்வி கேட்க, தொண்டர்கள் பாமக என்று குரல் எழுப்பினர். பாலக்காடு ஜோசியர் எத்தனை இடம் சொன்னார்? ஒருத்தரும் காதில் வாங்கவில்லை நான் சொன்னதை காதில் வாங்கி, கோட்டை விட்டு விட்டீர்களா? மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் கூட நாம் 7 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றி பெற முடியும்.

ஆனால், உங்கள் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்பொழுது நாம் தயாராக இல்லை. 12 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அன்புமணி ராமதாஸ் தலைமையில் தேர்தல் பணிகளை நடத்துகிறோம். நீங்கள் கட்சி வளர்ச்சிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். தேர்தல் முடியும் வரை இதே நிலை தொடரும் என்று நீங்கள் சபதம் ஏற்றுள்ளீர்கள். தேர்தலில் வெற்றி பெற முதலில் நமக்கு ஒற்றுமை தேவை. கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது. அந்த கோஷ்டியை விட இந்த கோஷ்டி சிறப்பாக செயல்படுகிறார்கள் வேகமாக செயல்படுகிறார்கள் என்று தான் இருக்க வேண்டும்.

parliament election
parliament electionfile

பாமக இதுவரை 9 மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை சேர்த்தால் 10. இட ஒதுக்கீட்டுக்காக பலமுறை போராடியுள்ளோம். போராட்டமே என் வாழ்க்கை; போராடுவதே என் குணம். பூட்டா சிங் உங்களுக்கு எத்தனை தொகுதி வேணும் எவ்வளவு பணம் என்று தான் கேட்டார் நான் இந்த ஊமை ஜனங்களுக்கு இட ஒதுக்கீடு, கல்வி வேண்டும் என்றேன்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com