”நானும் திருமாவளவனும் பாசமாக இருந்தோம், இருக்கிறோம்.. ஆனால்” - மருத்துவர் ராமதாஸ் சொன்னது என்ன?
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அன்புமணி மீது ராமதாஸ் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க, அன்புமணி கட்சியில் தனக்கு இருக்கும் பலத்தைக் காட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
இதுதொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் தன் தந்தையைக் கலங்க விடக்கூடாது, அவரது பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
அன்புமணி தந்தை ராமதாஸை கலங்கவிடக் கூடாது! - திருமாவளவன்
தனியார் செய்திசேனலுக்கு பேட்டியளித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், பாமகவில் நடந்துவரும் உட்கட்சி பிரச்னைகள் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை, மூத்தவர் என்ற முறையிலும், நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர் என்ற முறையிலும் ராமதாஸ் சொல்லுக்கு கட்டுப்பட்டு அன்புமணி கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஒருதாய் மக்கள் மாநாடு நடத்திய முதல் தலித் அல்லாத தலைவர் ராமதாஸ் என்று கூறிய திருமாவளவன், நீல நிறத்தை கொடியில் இணைத்தார், தலித்களை பொதுசெயலாளராக்கினார், அம்பேத்கருக்கு சிலைகளை நிறுவினார், தலித்களை அமைச்சராக்கினார் என்று பல நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
திருமாவளவனை பாராட்டிய ராமதாஸ்..
இந்த சூழலில் திருமாவளன் குறித்து சமீபத்தில் பேசியிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “நானும் திருமாவளவனும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை ஊர்த்தெருவின் வழியே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டபோது, தடையை மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றேன். அதற்காக தமிழ்க்குடி தாங்கி என்று பட்டம் கொடுத்து பாராட்டியவர் திருமா என்று மருத்துவர் ராமதாஸ் நினைவுகூர்ந்தார்.
மேலும், “அன்புமணி ராமதாஸ் தன் தந்தையைக் கலங்க விடக்கூடாது... அவரது பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்” என்று சமீபத்தில் திருமாவளவன் கூறியிருந்தது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும், ஆனாலும், இன்னமும் திருமாவளவன் திருமணம் செய்துகொள்ளாதது தனிப்பட்ட முறையில் தனக்கு வருத்தமளிப்பதாகவும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல அபிப்ராயங்களை வெளிப்படுத்தினாலும், சமீபத்திய நேர்காணலில் பாமக கட்சியில் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டிய திருமாவளவன், பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என தீர்க்கமாக கூறினார். 2026 அரசியல் களம் நிறைய மாற்றங்களை சந்திக்கவிருப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விசிக பொதுச் செயலாளரும், எம்பியுமான ரவிக்குமார் ’மருத்துவர் ஐயாவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “திரு மருத்துவர் ஐயா அவர்கள் எமது தலைவர் @thirumaofficial அவர்களைப் பற்றி மனம் நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளுக்கு நன்றி. தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென சனாதன சக்திகள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக்கொண்டுள்ளன.
சமூக நீதியைக் காப்பதற்கான தேவை 1989 ஐ விட இப்போது இரு மடங்காக உள்ளது. மருத்துவர் ஐயா அவர்களே! சமூகநீதிக்கான போர்க் களத்தில் மீண்டும் நுழையுங்கள்! உங்களை நம்பி வந்த மக்களை சனாதனம் காவுகொள்ளாமல் காப்பாற்றுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.