16 குற்றச்சாட்டுகள்.. பதிலளிக்க அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு கெடு!
தமிழகத்தின் பிரதான கட்சியாக விளங்கும் பாமகவில், தந்தை மகனுக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், கட்சி இரு பிரிவுகளாக உள்ளது. இந்த நிலையில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு விளக்கம் அளிக்க அன்புமணிக்கு ஆகஸ்ட் 31 வரை ராமதாஸ் தரப்பு கெடு விதித்துள்ளது.
ஒரு கட்சியால் தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையே, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை நடத்தின. அதன்படி, ஆகஸ்ட் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸே கட்சியின் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பதினாறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 31ஆம் தேதிக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ பதில் அளிக்கலாம் என ராமதாஸ் தரப்பு கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பாமக செயல் தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்கம் செய்யவும் ராமதாஸ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.