ராமதாஸ் vs அன்புமணி |மோதலுக்கிடையே தந்தையர் தின வாழ்த்து!
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை பாதாளத்தில் தள்ளப்பார்க்கிறார்கள்.. என்று சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இப்படி ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்குநிலவி வரும் சூழலில், தந்தையர் தினம் குறித்த வாழ்த்து ஒன்றினை வெளியிட்டுள்ளார் பாமக அன்புமணி.
கடந்த ஆண்டு நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது பேரன் முகுந்தனை பாமகவின் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ். அறிவித்த அடுத்த நொடியே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி.. அப்போதே ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இடையே வார்த்தை மோதல் உண்டானது.
இந்த சம்பவத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். அண்மையில் இருவரும் சந்தித்து கொண்டாலும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் முயற்சித்தும், முழு உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில்தான், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் தலைவர்களை அதிரடியாக நீக்கி வருகிறார் ராமதாஸ். ஆனால், அவர்கள் அனைவரும் அப்பதவியிலேயே தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
ஆனால், அவர்கள் அனைவரையும் நீக்கிய ராமதாஸ், புதிய தலைவர்களை நியமனம் செய்தார். இவர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தநிலையில்தான், பாமக அன்புமணி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
அதில், “ தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!.” என்று தெரிவித்துள்ளார்.
மோதலுக்கிடையே தந்தையர் தின வாழ்த்தை அன்புமணி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் கவனத்தை பெற்றுள்ளது.