”என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்கள்.. மகனாக, கட்சியின் தலைவராக செய்கிறேன்” - அன்புமணி ராமதாஸ்
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்துள்ள நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸும், திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், தமது தந்தையான ராமதாஸ் மன நிம்மதியுடன், நல்ல உடல் நலத்துடன் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும் என தெரிவித்தார். அவர் பேசுகையில், “சமூக நீதிக்காக பாமகவை தொடங்கினார் மருத்துவர் ஐயா . பல போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு கேட்டும் இதுவரை செய்யவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு.
தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக. திமுக, அதிமுகவை மாறி மாறி ஆட்சியில் அமரவைப்பதற்காக பாமக தொடங்கப்படவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போதுதான் சமூக நீதி காக்கப்படும். பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று முதல் திமுக ஆட்சியின் கவுண்டவுன் தொடங்கி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லை.” என்று பேசினார்.
மேலும், பேசிய அவர், “ மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன் 100 ஆண்டுகளுக்கும் மேல் நல்ல மனநிம்மதியுடன் வாழ வேண்டும். மருத்துவர் ஐயா அவர்களுக்கு என்மேல் எதாவது கோபம் இருந்தால், தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள். ஐயாவிற்கு சர்க்கரை நோய், பிபி எல்லாம் உள்ளது . கோபமடைய வேண்டாம்.
நீங்கள் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உங்களது கனவுகளை நிறைவேற்றுவோம். நீங்கள் எங்களது தேசியத் தலைவர். நீங்கள் மாநில தலைவர் அல்ல.. தேசிய தலைவர். பாமக கட்சி கடந்து வந்த பாதை கடினமான பாதை. என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் மகனாக , கட்சியின் தலைவராக செய்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக என்ன நடந்தது?
பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று கூறப்பட்டது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் இனி தலைவரும் நானே, நிறுவனரும் நானே என்று பேசியிருந்தார். மேலும், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் முயற்சித்தும் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில்தான், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் தலைவர்களை அதிரடியாக நீக்கி வருகிறார் ராமதாஸ். ஆனால், அவர்கள் அனைவரும் அப்பதவியிலேயே தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
ஆனால், அவர்கள் அனைவரையும் நீக்கிய ராமதாஸ், புதிய தலைவர்களை நியமனம் செய்தார். இவர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்தான், திருவள்ளூர் மாவட்டத்தில் அன்புமணி தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இதில், ராமதாஸிடம் அன்புமணி தன்மேல் கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.