வேளாண் மாநாடு | இன்று கோவை வரும் பிரதமர் மோடி.. சந்தித்துப் பேசும் கே.பழனிசாமி!
கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று கோவை வருகை
கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக பிற்பகல் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் பிரதமர், விழா நடைபெறும் கொடிசியா அரங்குக்கு 1.45 மணிக்குச் செல்கிறார். பின்னர் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21ஆவது தவணையாக, 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்கிறார். இதன்படி 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா 2 ஆயிரம் சேர்ப்பிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 தவணைகளாக இந்நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தவணைக்கும் அரசு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைச் செலவிடுகிறது. இதைத் தொடர்ந்து, இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்துள்ள 10 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் பிரத்யேக அரங்குகளையும் விவசாய உற்பத்திப் பொருள்களையும் பார்வையிடுகிறார்.
200 அரங்குகளையும் விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இலவசமாகப் பார்வையிடலாம். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடும் பிரதமர், நிகழ்ச்சி முடிந்து பிற்பகல் 3.45 மணிக்கு கொடிசியா அரங்கில் இருந்து புறப்படுகிறார். 3.55 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில் பிரதமர் டெல்லி புறப்படுகிறார்.
கோவையில் தீவிர கண்காணிப்பு
முன்னதாக, பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். தவிர, கோவை மாநகரம் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் கிளம்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
பிரதமரின் தமிழக வருகையின்போது கருப்பு பலூன், கருப்புக் கொடிகள் காட்டுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடும் முற்போக்கு மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு பின்னால் திமுகவும், திகவும் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்
அதேநேரத்தில், கோவையில் நடக்கும் விவசாயிகள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், விதைகள் மசோதா 2025, மின்சார மசோதா 2025 என இரண்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை தொடர்ந்து செய்துவரும் பிரதமர் மோடி, எந்த முகத்தோடு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார் எனவும் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமரைச் சந்தித்துப் பேசும் கே.பழனிசாமி
மறுபுறம், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் மோடியை சந்திப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளனர். பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவதால், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்த கேள்விக்கு, “சஸ்பென்ஸ். பொறுத்திருந்து பாருங்கள்” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

