தமிழகத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஒகி புயலாக மாறி கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தமிழக அரசின் சார்பில் புயல் பாதிப்பு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
இந்நிலையில் புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்யத் தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலம் முதலமைச்சர் பழனிசாமியிடம் மோடி உறுதியளித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின் போது புயல் பாதிப்பு பற்றி விரிவான அறிக்கையை விரைவில் அளிக்கிறோம் என பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

