அரசுமுறைப் பயணமாக திருச்சிக்கு வருகைத் தரும் பிரதமர் மோடி, விமானம், ரயில், சாலை, எண்ணெய், எரிவாயு, கப்பல், உயர்க்கல்வி உள்ளிட்ட துறைகளில், 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
திருச்சியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை, பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு நிலை கட்டடத்தில் ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாள முடியும் என்றும், உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில் 3 ஆயிரத்து 500 பயணிகளை சமாளிக்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ரயில்வே துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். மதுரை - தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில்வழித்தடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால், பயணிகள், சரக்கு ரயில் சேவைகள் வலுபெறும் என்றும், பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் தமிழ்நாட்டிற்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேபோல், திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டிணம், ஏர்வாடி, மதுரை மற்றும் பிற பகுதிகளை இணைக்கும் ஐந்து சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். அதோடு, முகையூர் – மரக்காணம் இடையிலான என்.எச்.332A தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல்லை நாட்டுகிறார்.
கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள இந்த ஐந்துவழிப் பாதையால், சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு சென்று வர வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன், காமராஜர் துறைமுகத்தில், வாகன இறக்குமதி ஏற்றுமதிக்காக கட்டமைக்கப்பட்டுள்ள ஜெனரல் கார்கோ இரண்டாம் பெர்த்தை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பின், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டங்கள், வர்த்தகம், வீட்டுத்தேவை, தொழில்தேவைகளை நிறைவேற்றக்கூடிய திட்டங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்துக்கு Fast reactor fuel reprocessing ஆலையை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். 400 கோடி ரூபாயில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆலை, அணு உலையிலிருந்து வெளியாகும் கார்பைட் மற்றும் ஆக்சைடு எரிபொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுடன் திருச்சி என்ஐடி கல்வி நிலையத்தில், 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதியையும் பிரதமர் மோடி திறக்கவுள்ளார்.