கரூர் 39 பேர் உயிரிழப்பு| தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி!
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயை நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.
அதேபோல தவெக தரப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த மோடி..
கரூரில் மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
அந்தபதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் தற்போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.