மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 2 மணி நேரமாக ஆலோசனை..!
சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்றார்.
இரு நாட்டுத் தலைவர்களும் வெண்ணெய் உருண்டை கல் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது இருவரும் கைகளை உயர்த்தியபடி உற்சாகமாக போஸ் கொடுத்தனர். வெண்ணெய் உருண்டை கல் அருகே சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங், அதனை வியப்புடன் கண்டு ரசித்தார். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடந்த கலாசார நடன நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வெகுவாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் நடனக் கலைஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்து அசத்தினர்.
இதனையடுத்து சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணியளவில் இரவு விருந்து நடைபெற்ற நிலையில் அதன்பின் இருவரும் இரண்டு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சென்னைக்கு பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.