ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்.. பிரதமர் மோடி அறிவிப்பு!
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில், ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், விழாமேடைக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் தஞ்சை பாணி ஓவியத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சைவ ஆதீனங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா தொடங்கியதும், ஓதுவார்களின் சிறப்பு பாராயணம் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம், திருப்புகழை ஓதுவார்கள் பாட, இருகரம் கூப்பிபக்தியுடன் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு மகிழ்ந்தார்.
சிம்பொனி திருவாசகத்தை அரங்கேற்றிய இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா தலைமையிலான குழுவினர், இசை மூலம் சோழமன்னருக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர். ஓம் சிவோஹம் என்ற பாடலை பாடகர்கள் பாட, அதை மனமுருக கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து, சிம்பொனி திருவாசகத்தை அரங்கேற்றி, சோழீஸ்வரருக்கு இளையராஜா இசையஞ்சலி செலுத்தினார்.
ராஜராஜனுக்கும், ராஜேந்திரனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள்
இதனைத் தொடர்ந்து ராஜேந்திரசோழனின் பெருமையை பறைசாற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று என பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஜனநாயகத்தின் முன்னோடிகளாக சோழர்கள் திகழ்ந்ததாகவும் புகழாரம் சூட்டியதுடன், மாமன்னர்கள் ராஜராஜனுக்கும், ராஜேந்திரனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படுமென அறிவித்தார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்தஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசியபிரதமர், நாட்டின் 140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில்வேண்டியதாகவும், சிவனின் தரிசனமும், இசைஞானி இளையராஜாவின் இசையும் தனது ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டதாகவும் கூறினார். பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த வாய்ப்பு பெரும்பேறு எனக் குறிப்பிட்ட பிரதமர்மோடி, சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப்போனதாக வியந்து கூறினார்.
சோழ சாம்ராஜ்யம் நம் பாரத தேசத்தின் பொற்காலங்களில் ஒன்று
ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இருபெயர்கள் நம் தேசத்தின் அடையாளம் என பெருமிதம் தெரிவித்த பிரதமர், சோழ சாம்ராஜ்யம் நம் பாரத தேசத்தின் பொற்காலங்களில் ஒன்று என குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி எனவும், நம்நாட்டை ஆட்சி செய்த பிரிட்டிஷாருக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடியாக சோழராட்சி இருந்ததாகவும் தெரிவித்தார்.
நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் சோழர்கள்
உலகமே வியந்து பேசும் நீர் மேலாண்மைக்கு முன்னோடிகளாக சோழர்கள் இருந்தார்கள் எனவும், கங்கையின் மகத்துவத்தை உணர்ந்திருந்தவர் ராஜேந்திர சோழன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார் . காசியின் பிரதிநிதி, கங்கையின் மகன், காவிரி கரைக்கு கங்கை நீரைக்கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழீஸ்வரம் என தெரிவித்த பிரதமர் மோடி, பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள் எனவும் புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்மொழி ஒலித்ததாகவும், தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதாகவும் தெரிவித்தார். சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம் எனவும், இன்று உலகில் இருக்கும் நிலையில்லா தன்மை, வன்முறை , சுற்றுச்சூழல் என பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் பாதையாக சைவ சித்தாந்தம் இருப்பதாகவும் பிரதமர் மோடிகுறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசிய பிரதமர் மோடி
அன்பே சிவம் என்பது மிகவும் தொலைநோக்கான பார்வை என தெரிவித்த பிரதமர் மோடி, இதனை கடைப்பிடித்தால் உலகில் சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் எடுத்துக்காட்டியதாக கூறிய பிரதமர்மோடி, புதிய இந்தியாவிற்கு சோழ சாம்ராஜ்ஜியம் வரைபடம் தருவதாக கூறினார். மேலும் பெரும் பேரரசர்களான ராஜராஜனுக்கும், ராஜேந்திரனுக்கும் தமிழகத்தில் பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படுமெனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் தனது இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டுச்சென்றார்.