ப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி

ப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி

ப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி
Published on

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான புதிய புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே மாணவர்களுக்குக் கிடைத்துவிடும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், உண்மையில் இன்னும் பல பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் உள்ளன.

அரசுப் பள்ளிகள்:

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை பல மாவட்ட பள்ளிகளுக்கு எந்தப் புத்தகமும் வழங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரி-தாவரவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் இரண்டாவது வால்யூம் அச்சிடப்படவே இல்லை எனக் கூறப்படுகிறது. அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வழங்குவதற்காக எந்தப் புத்தகமும் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதனால் பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆகியும் பாடங்கள் எடுக்க முடியாமல் பள்ளிகள் தவிக்கின்றன.

தனியார் பள்ளிகள்:

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் User ID மற்றும் Password வழங்கப்படும். குறிப்பிட்ட பள்ளி அனுமதி பெற்றிருக்கும் வகுப்பு வரையிலான புத்தகங்களை இணைய வழியில் பள்ளிகள் ஆர்டர் செய்துகொள்ளலாம். இதுவே வழக்கம். இந்நிலையில், ப்ளஸ் 1 தமிழ், கணினி அறிவியல், வணிகவியல் புத்தகங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ப்ளஸ் 2 தமிழ், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் புத்தகங்கள் இருப்பில் இல்லை என இணையத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மாணவர்கள் பாதிப்பு:

இதனால் சில தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்காமலும், திறக்கப்பட்ட பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்தப்படாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும் சூழலில் அதற்கான புதிய புத்தகங்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பது மாணவர்களிடையே சோர்வை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் பல புதுமைகளை உட்படுத்தியுள்ள தமிழக அரசு அவை மாணவர்களிடம் சரியான நேரத்தில் சென்றடைய தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சியும் தாமதம்:

புதிய புத்தகங்கள் மாணவர்களுக்குக் கிடைப்பதில் தாமதம் என்பது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம், அது குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சியும் தாமதமாகி உள்ளது. பாடங்களின் வடிவமைப்பே மாற்றத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில், அது குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன் முதல் வாரம் என தள்ளிப்போனது. தற்போது  பாடப் புத்தகங்கள் கிடைக்காததால் அதுவும் தாமதாமாகி உள்ளது. இதனால், புதிய பாடத்திட்டங்களை மணவர்களிடம் சென்று சேர்ப்பதில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது.

 தகவல்கள் : அபிநயா, முதன்மை செய்தியாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com