“ப்ளீஸ் எங்க அம்மாவுக்கு வேலை கொடுங்க” - கதறும் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாரின் மகள்
கோயில் ஓதுவார் பணியை இழந்த அங்கயற்கண்ணி மீண்டும் ஓதுவார் பணி கேட்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் 24 அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களை நியமித்தது. 13 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக 2006ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்ற பெண்ணை ஓதுவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார், தேவாரம் பாடும் பாக்கியம் பெற்ற பெண், திருச்சியை திரும்பிப் பார்க்க வைத்த பெண் ஓதுவார் என்றெல்லாம் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பேசப்பட்டு தமிழகத்தில் வரலாறு படைத்த முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி, ஓதுவார் பணியை இழந்த நிலையில் அரசு எனக்கு எப்படியாவது மீண்டும் ஓதுவார் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. ஆதிதிராவிடர் குடும்பத்தில் பிறந்த இவர், அரசு இசைப் பள்ளியில் இசை பயின்று அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு துறைகளுக்கும் வேலை கேட்டு கோரிக்கை முன்வைத்தார். அதன் விளைவாக கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில், திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவணேஸ்வரர் கோயிலில் ஓதுவார் ஆக பணியாற்றத் தொடங்கினர்
ஆதிதிராவிட முதல் பெண் ஓதுவராக தமிழகமே திரும்பிப் பார்த்த வியத்தகு பெண்ணாக இருந்த அங்கயற்கண்ணி, தற்போது வேலை இழந்து நிற்கிறார். 2010 ஆம் ஆண்டு அவருக்கு திருமணமான நிலையில் 2011-ல் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், குடும்ப சூழ்நிலையாலும் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், திருச்சியில் இருந்து நாமக்கல் சென்றதால் கோயிலில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த அழைப்பு கடிதமும் கிடைக்கப் பெறாமல் போனதால் 2013 முதல் 2016 வரை பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரை நேரடியாக சந்தித்து மனு அளித்ததுடன் தனக்கு மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஓதுவார் பணி வழங்காமல் அன்னதான உதவியாளராக பணி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் பணியமர்த்தியது செல்லாது என புதிதாக நியமிக்கப்பட்ட கோயில் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனால் 2006ஆம் ஆண்டு வெறும் 1,800 ரூபாய் சம்பளத்திற்கு பணியில் சேர்ந்து இறைவனுக்கு பாடல் பாடுவதை வாழ்க்கையாக அர்ப்பணித்த தனக்கு தற்போது பணி இல்லாதது வேதனை அளிப்பதாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக பணிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைக்கிறார். இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் தொடர்ந்து முறையிட்டும் இதுவரை பணி வழங்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
“தமிழகத்தின் முதல் ஓதுவாராக இருந்த அம்மாவுக்கு தற்போது வேலை இல்லை. டிரைவர் வேலை பார்க்கும் அப்பாவுக்கும் வருமானம் போதவில்லை. இதனால் வீட்டில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை. எனவே ப்ளீஸ் எங்க அம்மாவுக்கு வேலை கொடுங்க” என கதறி அழுகிறார் அங்கயற்கண்ணியின் மகள் தர்ஷினி ஸ்ரீ (10). இந்த குழந்தையின் கண்ணீரை துடைக்க, அங்கயற்கண்ணியின் வேண்டுகோளை அரசு ஏற்று பணி வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
- திருச்சி பிருந்தா

