மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்குக்கு தடை..!

மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்குக்கு தடை..!

மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்குக்கு தடை..!
Published on

மதுரை மாவட்ட அரசு அலுவலகங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இதற்கான முன்முயற்சிகளை சில மாவட்டங்கள் இப்போதே தொடங்கியிருக்கின்றன. மதுரை‌ மற்றும் தஞ்சை மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமலுக்கு வந்துள்ள பிளாஸ்டிக் தடை பற்றி விரிவாக பார்க்கலாம்.

உணவை மூட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர், உணவு மேசைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் கோட்டிங் உள்ள காகித தட்டுகள், கப்புகள், பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகளுக்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சிகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் நான் ஓவன் பாலிப்ரொபிளின் பைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, தொன்னை, அலுமினிய தகடுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. காகித உருளைகள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோக கோப்பைகள், மூங்கில், மரம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், காகிதத்தால் செய்யப்பட்ட உறிஞ்சிகள், துணி, காகிதம் மற்றும் சாக்கினால் செய்யப்பட்ட பைகள், காகிதம் மற்றும் துணியால் செய்யப்பட்ட கொடிகள், செராமிக் பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, படிப்படியாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் ‌வகையில், மக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com