புவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க திட்டம்
மாநிலத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் மூலம் அனைத்து வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய தகவலியியல் மையத்தின் சார்பாக தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் மூலம் அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது. இது குறித்து நெல்லை ஆட்சியர் ஷில்பா கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் உள்ள 2979 வாக்குச் சாவடிகளின் புவிசார் குறியீடான தீர்க்க ரேகை மற்றும் அட்சரேகை ஆகிய அளவுகளை பயன்படுத்தி, தேசிய தகவல் மையத்தின் புவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச் சாவடிகளின் புவியியல் தகவலை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இது முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும் ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கை போன்ற அடிப்படையான முக்கிய விவரங்களை தேர்தல் அலுவலர்கள் புவியியல் வரைபடமாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்தல் சமயத்தில் ஏதேனும் எதிர்பாரா சூழ்நிலை உருவானால் TN-GIS மூலம் தேர்தல் அலுவலர்கள் பல முக்கிய முடிவுகளை எளிதில் எடுக்க முடியும். இது தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது என்ற தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் நடந்த பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் இதுவரை ₹1,20,76,360 ரூபாய் மற்றும் 148 கிராம் தங்கம் அகியவை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் இதுவரை 185 அழைப்புகள் வந்துள்ளதாகவும், 54 புகார்கள் சிவிஜில் மூலம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதுவை 3 வழக்குகள் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தெரிவித்துள்ளார்.