குண்டம் இறங்கும் விழாவில் தீ மிதித்த மாற்றுத்திறனாளி பெண், தீ குண்டத்தில் தவறி விழுந்து காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நடைபெற்றது. அதிகாலை சுமார் 4 மணி அளவில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கினர். அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தீ குண்டத்தில் இறங்குவதற்கான வரிசையில் நின்றார். அவருக்கு தீயணைப்பு வீரர் ஒருவர் உதவி செய்து பெண்ணுடன் சேர்ந்து குண்டத்தில் இறங்கினார். ஆனால் அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அந்தப் பெண் குண்டத்தில் தவறி விழுந்தார். அங்கிருந்த மற்ற தீயணைப்பு வீரர்களும், மக்களும் அந்தப் பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

