எடுப்பார் கைப்பிள்ளையா நாங்கள்..? மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்

எடுப்பார் கைப்பிள்ளையா நாங்கள்..? மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்
Published on

அரசியல்வாதிகள் எள்ளி நகையாட எடுப்பார் கைப்பிள்ளையா. நாங்கள்.? என ராதாரவிக்கு எதிராக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆவேசமாக பேசினர்.

ஒருசில நாட்களுக்கு முன்பு, திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி சென்னையில் தங்கசாலையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசினார். அப்போது மேடையில் இருந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்

ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டை மாற்றுத் திறனாளி அமைப்பைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆவேசமாக பேசிய அவர்கள்.. அரசியல்வாதிகள் எள்ளி நகையாட எடுப்பார் கைப்பிள்ளையா நாங்கள்..? வரலாறு தெரியாத ராதாரவிக்கு இது கேவலம். எங்களை பற்றி ஒரு துளி அளவு கூட அவருக்கு தெரியாது. நீங்களா வீரன்..? ஒவ்வொரு விஷயத்திற்கும் கஷ்டப்பட்டு சொந்தக் காலில் நிற்க பாடுபடுகிறோமே நாங்கள் தான் வீரர்கள். குழந்தைகள் உரிமைக்கான ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்த ‌வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் பற்றிய இப்படிப்பட்ட கருத்துக்களைத் திமுக ஏற்காது என்றும் அவர் கூறியுள்ளார். மன ஊனமே தாண்ட முடியாத தடை என முகநூலில் குறிப்பிட்டுள்ள கனிமொழி, மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக முதன் முதலாக நலவாரியம் அமைத்த திமுகவைச் சேர்ந்த ஒருவரே இப்படி விமர்சித்திருப்பது அக்கட்சினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com