பெட்ரோமாஸ் விளக்கில் இரிடியம் இருப்பதாகக் கூறி ஏழு கோடி ரூபாய்க்கு மோசடி செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். விவசாயி. இவர் நூறு ஆண்டுகள் பழமையான பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒன்றை வைத்துள்ளார். இந்த விளக்கில் இரிடியம் உள்ளதாகவும், வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் விலைபோகும் என விருத்தாச்சலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் வேலாயுதமும் அவர் நண்பர் சிவாவும் கூறினர். இதை உண்மை என நம்பி, வாங்க நினைத்தார் வேல்முருகன். அதற்கு ஏழு கோடி என்று விலை பேசினர். பின்னர் வேலாயுதம் வீட்டுக்கு அவரை அழைத்துவந்து, லைட்டை எடுத்து காண்பித்தனர். அப்போது திடீரென்று வாசலில் ஐந்து பேர் வந்து நின்றனர். வேலாயுதம் யாரென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் கடலூர் நுண்ணரிவு பிரிவு போலீசார். வேலாயுதம் மற்றும் சிவாவை கைது செய்தனர். பெட்ரோமாக்ஸ் லைட்டையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சதுரங்கவேட்டை படத்தில் இப்படித்தான் ஒவ்வொருவரையாக ஏமாற்றுவார், படத்தின் ஹீரோ. அதே போல நடந்த இந்த ஏமாற்றும் முயற்சி போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளது.