சாலைபோக்குவரத்து முடங்கியதால் பெட்ரோல் பங்குகள் மூடல்
கேரளாவில் சாலைபோக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.
தமிழக, கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் தேக்கடி பகுதிகள் கன மழையால் சுற்றுப்புற நகரங்களில் இருந்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. குமுளி, தேக்கடியை இணைக்கும் முக்கிய பாதையான தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் குமுளி மலைப்பாதையில் ஏற்கனவே சாலை பெயர்ந்து நான்கு நாட்களாக போக்குவரத்து முடங்கியது. மற்றொரு பாதையான வண்டிப்பெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கட்டப்பனை சாலை போக்குவரத்தும் மண் சரிவால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், குமுளி, தேக்கடி பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொச்சியில் இருந்து பெட்ரோல், டீசல் கொண்டு வரும் டேங்கர் லாரிகள் வர முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதை உணர்ந்த வாகன ஓட்டிகள், நேற்று இப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டு பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பியதுடன், இருப்பு வைப்பதற்காக பாட்டில்களிலும் வாங்கி சென்றனர். இந்நிலையில் நேற்றே டீசல் முழுவதும் தீர்ந்து விட்ட நிலையில் இரவில் இருப்பு இருந்த பெட்ரோலும் தீர்ந்துவிட்ட்டது. இதனால் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் இல்லாததால் பெரும் சிரமமும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.