விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி
விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

விவசாய நிலங்களின் மீது உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடைக் கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம், ராய்கரிலிருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூருக்கு 6,000 மெகா வாட் மின்சாரம் கொண்டு வரும் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மத்திய மின்தொகுப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக சட்டீஸ்கரில் இருந்து தமிழகத்துக்கு 1,843 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5,530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் மீது மின்கோபுரம் அமைப்பதற்கு தடை கோரி பழனிசாமி என்பவர் உட்பட 11 விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே மின் கதிர்கள் பாய்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் கோபுரத்தின் உயரத்தை உயர்த்துமாறு கோரிக்கை மனு அளிக்கலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, தமிழகத்தில் வெறும் 345 கிலோ மீட்டருக்கு மட்டுமே மின் கோபுரங்கள் அமைக்கும் நிலையில், மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புவதோடு, வழக்கு மீது வழக்காக தாக்கல் செய்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களில் தடையில்லா மின்சார வசதியை பெற்று அனுபவித்து விட்டு, தற்போது பொது மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி பொய் போராட்டங்களை நடத்தி, அரசு திட்டங்களை முடக்குபவர்கள் உண்மையிலேயே மக்கள் பிரச்னையை வெளிக்கொண்டு வருகிறோமா என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com