திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு...!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் இவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் முறைகேடுகளை தடுக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரசாத் என்பவர் தாக்கல் செய்துள்ள முறையீட்டில், கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேசமயம் இதனை அவசர மனுவாகவும் விசாரிக்க பிரசாத் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பிரசாத்தின் முறையீட்டை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.