கரூர் விவகாரம்| புலானாய்வு குழு நியமித்தது பொய்யான வழக்கா..? உத்தரவை திரும்ப பெற வேண்டுமென மனு!
கரூரில் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, அக்டோபர் 3ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குட்பட்ட இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரர் கற்பனையான நபர்..பொய்யான வழக்கு!
அந்த மனுவில், வழக்கை தாக்கல் செய்த தினேஷ், வில்லிவாக்கத்தில் பாபுநகர் என்னுமிடத்தில் வசிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அதுபோல எந்த நகரும் இல்லை. கற்பனையான நபரின் பெயரில் நீதிமன்றத்தில் மோசடி செய்து இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. கரூர் காவல்நிலையம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதை மறைத்து, அதிகார வரம்பு இல்லாத சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதே கரூர் துயர சம்பவம் தொடர்பாக, அக்டோபர் 3ம் தேதி இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்யப்பட்ட போது, மதுரை அமர்வை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டதை, அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள், வேண்டுமென்றே தனி நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத நபருக்கு (விஜய்யை) எதிராக கடுமையான கருத்துக்களும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மோசடி செய்து பெறப்பட்ட இந்த உத்தரவை திரும்பப் பெறுவதுடன், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.