கொரோனாவுக்கு சித்தா, ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கக் கோரி வழக்கு
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ முறைகள் மக்கள் நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன எனவும், கொரோனா பரவலைத் தடுக்க ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக தீர்வும், பக்க விளைவுகளைத் தரும் அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய - மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் தீவிரமாகியிருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.