ஐபிஎல் போட்டிக்கு தடையா..? உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஐபிஎல் போட்டிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
11-வது ஐபிஎல் போட்டி தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதனிடையே ஐபிஎல் போட்டிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி சம்பத் தாக்கல் செய்துள்ள மனுவில், ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சூதாட்டத்தை தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது. 2013-ல் ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் அணிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் மத்திய அரசு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.