“இடையில் என்ன நடந்தது?” - மகாராஷ்டிர அரசியல் திருப்பம் பற்றி பீட்டர் அல்போன்ஸ்
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ள அரசியல் திடீர் திருப்பம் குறித்து தமிழக காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லாத ஒரு நிலை வருமோ என்று அஞ்சுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக நிலவிய இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுக்கள் நடந்த நிலையில், மும்பையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு பின் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்பதில் 3 கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
3 கட்சிகளின் சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இதில் ஆட்சியமைப்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சரத் பவார் கூறியிருந்தார்.
அங்கு பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி திடீரென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக, பாஜவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் திடீர் திருப்பம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேரலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டல் அல்போன்ஸ் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர், “நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இதை போன்ற நிகழ்வுகள் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு மக்களின் மீதும் அரசியல் கட்சிகளின் மீதும் தேர்தல் நடைமுறைகளின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும். நேற்று முன்தினம் தான் சரத்பவார், ‘உத்தவ் தாக்ரே முதலமைச்சராக இருப்பதற்கு ஒத்து கொண்டிருக்கிறார்’ என்று பகீரங்கமாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. எல்லா தலைவர்களும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்று சொன்னால் ஜனநாயகத்தை யார் எடுத்து வழிநடத்துவது? இது நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லாத ஒரு நிலைமைக்கு இந்தியாவை தள்ளுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.