“மனைவியுடன் சேர்த்துவையுங்கள்.. இல்லாவிட்டால்”-செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய நபர்
மதுரையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய கணவனை 4 மணி்நேரமாக போராடி காவல்துறையினர் மீட்டனர்.
மதுரை கீரைத்துறை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு பாக்கியலெட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கண்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக மனைவி பாக்கியலட்சுமி கணவன் கண்ணனுடன் சண்டையிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் கோரிக்கை விடுத்தும் மனைவி வர மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் கண்ணன் இன்று காலை மதுபோதையில் திடீரென கீரைத்துறை பகுதியிலுள்ள செல்போன் டவரின் உச்சியில் ஏறி நின்றபடி மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க கோரிக்கைவிடுத்து தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரைத்துறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கீழே இறங்காத கண்ணன் மதுபோதையில் தலைகீழாக தொங்குவது, ஒற்றைகாலில் நிற்பது, நடனம் ஆடுவது என டவரின் உச்சியில் சாகசம் செய்துகொண்டிருந்தார்.
பொறுமை இழந்த காவல்துறையினர் கண்ணனின் மனைவி பாக்கியலட்சுமியையும் அழைத்து வந்து 4 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போதை இறங்கியுவுடன் தெளிவடைந்த கண்ணன் உயிருக்கு பயந்து டவரில் இருந்து வேகவேகமாக இறங்கினார். இதனைத் தொடர்ந்து கண்ணனையும் அவரது மனைவி பாக்கியலட்சுமியையும் காவல்நிலையத்திற்கு அழைத்துசென்ற காவல்துறையினர் சமாதானப்படுத்தி் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.