பக்தர்களுக்காக வெள்ளியங்கிரி மலை திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
செய்தியாளர்: பிரவீண்
முதியவர்கள், குழந்தைகள், உயர் இரத்த அழுத்த நோய், இதயநோய் பாதிப்பு, நுரையீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், சர்க்கரை நோய், வலிப்பு நோய், இரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்ற பயணத்தின் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மலையேற்றத்திற்கு செல்லும் பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும்.
குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையேற்றப் பகுதிகளில் குளிர் அதிகமாக இருப்பதால் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் விரிப்புகள் உடன் எடுத்துச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மலையேற்றம் செல்பவர்களை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழு பரிசோதனை செய்யும். உடற்தகுதி இருக்கிறது என மருத்துவக்குழு அனுமதி வழங்கிய பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவர். பயணத்தின்பொழுது உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் அளவுக்கு நீர் பருகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத்திணறல் மற்றும் இதர அசௌகரியங்கள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக கோவில் வளாகத்தில் இருக்கும் மருத்துவக்குழுவை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.