விழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்

விழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்
விழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி பெரியசெவலை கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் கள்ளக்குறிச்சியும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளகுறிச்சி, விழுப்புரம் மாவட்டம் எல்லை தொடர்பான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. 

அரசாணையில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தின் பெரும் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. ஆனால் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் இருந்த பெரியசெவலை, டி.கொளத்தூர், சரவணபாக்கம், ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்ததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

தங்களை மீண்டும் விழுப்புரம் மாவட்டதில் சேர்க்க வேண்டியும், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட திருவெண்ணெய் நல்லூர் தாலுக்காவில் இணைக்கக்கோரியும் பொதுமக்கள் பெரியசெவலை மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நேற்று மனு கொடுத்தனர். 

இந்நிலையில், பெரியசெவலை கூட்டுரோட்டில் இன்று மீண்டும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளதோடு, கருப்புக் கொடி ஏந்தியவாறு கூட்டுரோட்டிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தங்கள் ஊரினை சேர்க்க வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

பெரியசெவலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 60 கி.மீ தூரம் என்பதும், விழுப்புரத்திற்கு 18 கி.மீ தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு முன்னர் ஒன்றிய அலுவலகமாக இருந்த திருவெண்ணை நல்லூர் ஒன்றிய அலுவலம், தற்போது வட்டாட்சியர் அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகம் பெரியசெவலையில் இருந்து ஒரு கி.மீ தூரம் என்பதும், புதிதாதக பிரிக்கப்பட்டதன் படி உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உளுந்தூர் பேட்டைக்கு பெரிய செவலையில் இருந்து 18 கி.மீ தூரம் ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com